கதைக்களம் | நடிப்பது

அடியேன்
நபர் அடியேன் - நான் (எ) வசந்த் குமார்.அ.
கதாபாத்திரம் வழக்கம்போல வறுமைக்கு அஞ்சாத அசாதாரணமான படைப்பாளி
பணி தொழிற்திறமிருந்தும் முதலீடின்றித் தோற்றவன். வறுமையைப் போக்க வடிவமைப்பாளனாய் திகழ்கிறேன்.
காட்சி கனற்பொறிக் கனவுகளோடு கணிப்பொறி மனிதர்கள் நடுவே...
இடம் இழப்பின் வலிகள் மறத்துப்போன இருப்புக்கான யுத்தகளம்...
கொள்கை தூங்காத கனவோடு துவளாத முயற்சியில் ஓயாது உழைப்பது தான் என் தீராத ஆசை. மற்றபடி வெற்றியோ, தோல்வியோ நான் கணக்கில் கொள்வதில்லை.
இன்னும். . . vasanthkumarmdu@gmail.com | Orkut, facebook-ல் நண்பராகலாம் | +919791804048

நிஜமல்ல கதை



"கதையில் அவளைப்பற்றி நிஜத்தைச் சொன்னவன் நிஜத்தில் அவளைப் பற்றி கதையாய்ச் சொன்னேன்"
| நடிப்பது
இந்தப் பகுதியில் நான் ஊமைக் காதல் என்ற பெயரில் என் முன்னால் காதலை கதையாக எழுதியிருந்தேன். அதை என் நண்பர்கள் எல்லோரும் படித்தார்கள். அதில் காதலிக்கு பாதிப்பு வந்துவிடக்கூடாது என்பதற்காக அவளின் பெயர் மற்றும் சிலவற்றில் மாற்றங்களைச் செய்து யாரும் எளிதில் கண்டறியாத வண்ணம் கதையை மாற்றியமைத்திருந்தேன். அதை படித்துவிட்டு நண்பர்களில் சிலர் யார் அந்தப் பெண் என்று என்னிடம் வினவினார்கள். நான் சொல்ல மறுத்து வந்தேன். ஆனால், கதையைப் படித்த நண்பர்களுள் ஒருவன் கண்டறிந்துவிட்டிருந்தான்.

அவன் அவளுக்கு நெருங்கிய தோழன். மிகவும் நல்லவன். அவளுக்கு திருமணம் ஆகிவிட்டிருந்த போதும் அவள் வீட்டிற்கு சென்று பார்த்துவிட்டு வருபவன். இன்னும் சொல்லப்போனால் அவன் அவள் குடும்பத்தில் ஒருவன். அவனை எல்லோருக்குமே மிகவும் பிடிக்கும். அவனுக்கும் திருமணம் முடிந்துவிட்டது. ஒரு மகன் இருக்கிறான். தம்பதி சமேதராக அவளும், அவளின் கணவனும் அவன் வீட்டிற்கும் அடிக்கடி சென்றுவருபவர்கள் தான். இப்போது இருவரும் குடும்ப நண்பர்கள். அவன் எனக்கும் நல்ல நண்பன் தான். அவன் என் ஆர்க்குட்-சமூக வலைதளத்தில் கூட இப்போது இல்லை. படைப்பை பிரசுரித்துவிட்டு எல்லோருக்கும் அலைபேசியில் குறுந்தகவல் அனுப்புவது என் வழக்கம். அப்படி ஒரு குறுந்தகவல் அவனுக்கும் சென்றது. பார்த்திருக்கிறான். பார்த்ததும் படித்திருக்கிறான்.

படித்தவன் அதில் குறிப்பிடப்பட்டிருந்த சில நுணுக்கமான குறிப்புக்களை கருத்தில் எடுத்துக்கொண்டு யோசித்திருக்கிறான். கொஞ்ச நேரம் மண்டையைக் குடைந்து கொண்டிருந்தவனுக்கு இந்த ஆர்வம் இன்னும் அதிகரித்திருக்கிறது. யார் என்பதை கண்டறிவதில் கவனத்தைத்த திருப்பியிருக்கிறான். பிறகு யாராக இருபாள் என்று சொல்லப்பட்ட தகவல்களோடு அவளை ஒப்பிட்டு கற்பனை செய்து பார்த்திருக்கிறான். ஒப்பீடுகளில் சில துப்புகள் ஒத்துப்போய்விடவே உடனே என்னை அலைபேசி வழியே தொடர்புகொண்டான்.

நலம் விசாரித்தவுடன் அவன் கேட்ட கேள்வி - "அவளா இவள்?". கதையில் அவளைப்பற்றி நிஜத்தைச் சொன்னவன் நிஜத்தில் அவளைப் பற்றி கதையாய்ச் சொன்னேன். "அடே நண்பா, கதையில் நான் எத்தனை மறைத்திருந்தாலும் ஒரு சில விஷயங்களில் பொய் கூற முடியாது. கதையில் அவள் எழிலரசி என்று குறிப்பிட்டிருந்தேன். இவள் அழகி என்று குறிப்பிடும் அளவிற்கு ஒன்றும் அழகில் சிறந்தவள் இல்லை. கதையில் அவள் தோழிகளிடம் கூட அதிகம் பேசமாட்டாள் என்று குறிப்பிட்டிருந்தேன். இவளோ தன் ஆண் தோழர்களுடன் கூட தன்னை மறந்து சிரித்துப் பேசியதை நானே கல்லூரியில் பல முறை கண்டிருக்கின்றேன். இதற்கெல்லாம் மேல் அவள் தெய்வீகமானவள் என்று சொல்லியிருந்தேன். இவளை எந்தத் திசையிலிருந்து பார்த்தாலும் எள்ளளவும் தெய்வீகத் தன்மை இருப்பதாகத் தோன்றவே இல்லை. இப்படி சொல்லப்பட்ட எந்தக் குறிப்பிற்கு ஒப்பிட்டுப் பார்த்தாலும், சற்றும் ஒத்தே போகாத ஒருத்தியைச் சுட்டிக்காட்டி, எப்படிக் கேட்கிறாய் "இவளா அவள்?"  என்று." அவனோ நான் சொன்னது எல்லாவற்றையும் மறுத்தான். நானோ நாவில் நரம்பில்லாதவனாய் இதயத்தைக் கல்லாக்கிக்கொண்டு அவனிடம் வாதாடிக்கொண்டிருந்தேன். எவ்வளவு சொல்லியும் இறுதிவரை அவன் நம்பவே இல்லை. நானும் மறுப்பதை நிறுத்தவே இல்லை. வெறுப்பின் உச்சிக்கே சென்றவன், இறுதியில் இணைப்பைத் துண்டித்துவிட்டான்.

துண்டித்ததும் துயரத்தில் நான் அழுகையை அடக்கிக்கொண்ட விஷயம், பாவம் அவனுக்குத் தெரியாது.

-வசந்த் குமார் அருணாசலம்