கதைக்களம் | நடிப்பது

அடியேன்
நபர் அடியேன் - நான் (எ) வசந்த் குமார்.அ.
கதாபாத்திரம் வழக்கம்போல வறுமைக்கு அஞ்சாத அசாதாரணமான படைப்பாளி
பணி தொழிற்திறமிருந்தும் முதலீடின்றித் தோற்றவன். வறுமையைப் போக்க வடிவமைப்பாளனாய் திகழ்கிறேன்.
காட்சி கனற்பொறிக் கனவுகளோடு கணிப்பொறி மனிதர்கள் நடுவே...
இடம் இழப்பின் வலிகள் மறத்துப்போன இருப்புக்கான யுத்தகளம்...
கொள்கை தூங்காத கனவோடு துவளாத முயற்சியில் ஓயாது உழைப்பது தான் என் தீராத ஆசை. மற்றபடி வெற்றியோ, தோல்வியோ நான் கணக்கில் கொள்வதில்லை.
இன்னும். . . vasanthkumarmdu@gmail.com | Orkut, facebook-ல் நண்பராகலாம் | +919791804048

ஊமைக் காதல்




" என் உள்ளத்தில் கண்ணம்மாள் மறையவில்லை என்றாலும், மதி உட்புகுந்து கொண்டாள் "
| நடித்தது
எந்தத் தருணத்திலும் நான் என் காதலியையோ / காதலனையோ தவிர வேறு யாரையும் நிமிர்ந்தும் கூட பார்க்கமாட்டேன் என்பதெல்லாம் வெறும் வசனம் தான். உண்மையான வாழ்க்கையில் நாம் அதையெல்லாம் கடந்து தான் வர வேண்டி இருக்கின்றது. பல நேரங்களில் வசீகரமான பல பெண்களையோ, பெண்கள் வாலிப முறுக்குள்ள பல பையன்களையோ பார்க்க நேரும் போது அவர்கள் காதலிப்பவர்களாக இருந்தால், அந்த ஈர்ப்பையும் மீறி தன் காதலியோ / காதலனோ தான் அவர்களின் கண் முன் எப்போதும் தோன்றுவார்கள். கண்டிப்பாக உண்மையான காதலர்களுக்கு எப்போதும் அப்படித்தான் இருக்கும். காரணம் காதலுக்கு முன் அழகு, பணம், அந்தஸ்த்து, நடை, உடை, பாவனை என்று அத்தனையும் அடிபட்டுப் போகும். இறுதியில் நம் காதல் தான் ஜெயிக்கும். ஆனால் மிக நல்ல மனதுடைய ஒருவரைக் கண்டால் . . . .
அங்கு தான் நம் காதல் மிக பலமான பரிச்சயத்திற்கு உள்ளாகும். எத்தனை பாடு பட்டும் நம் காதல் அவர்களிடம் மட்டும் தோற்றுப் போகும். காரணம் நாம் யாரை காதலிக்கின்றோமோ அவர்களை விடவும் இவர் மனத்தாலும் குணத்தாலும் பன்மடங்கு உயர்ந்தவராக இருப்பார். நாம் நம் காதலியிடம் எதற்காக காதல் வயப்பட்டமோ அந்த குணாதிசியம் நம் காதல் வைத்திருப்பவர்களைக் காட்டிலும் இவரிடம் பல பல மடங்கு அதிகமாக இருக்கும் போது மனது கொஞ்சம் அதிகமாகவே ஏங்கும். ஆனால் சபலப் படாது. காரணம் மனதால் அவர்கள் காதலிக்கத் தூண்டப் படுபவர்களாக இருப்பார்களே தவிர சபலத்திற்கு ஆட்படுத்துபவர்களாக இருக்க மாட்டார்கள். உண்மையான காதலுக்கு மற்றொரு உண்மையான காதல் தான் போட்டியாக முடியும். ஒரு வேலை நாம் நினைக்கின்ற அதே நபருக்கும் நம் மீது காதல் ஏற்படும் அறிகுறிங்கள் வந்துவிட்டால். . . .
அது நம்மை இன்னும் மனச் சஞ்சலத்திற்கு உள்ளாக்கும். 

இன்று தொழில்நுட்பங்கள் வளர்ந்து விட்டன. காரணம் எங்கு சென்றாலும் எப்போதும் மற்றவருடன் தொடர்பிலேயே இருக்கின்றோம். மனதில் இருக்கும் எல்லா எண்ணங்களையும் எல்லோரிடமும் உடனுக்குடன் பகிர்ந்துகொண்டு விடுகின்றோம். இதனால் சில பேருக்கு வாழ்க்கை சுவாரசியமாக இல்லாமலேயே இருக்கின்றது. ஆனால் அந்த டெக்கனாலசியை தகவல் தொடர்பு விசயத்தில் கொஞ்சம் அளவாகவே வைத்துக்கொள்பவர்களுக்கு விதி பல மாற்றங்களை செய்துகொண்டிருக்கின்றது. அதிரடியான பல மனதால் தாங்க முடியாத தகவல்களை கண் முன் கொண்டு வந்து போட்டு உடைத்து விடுகின்றது. சில நேரங்களில் மிக அரிய விசயங்களையும் எளிதில் சாத்தியப் படுத்திவிடுகின்றது. அப்படி விதி டெக்கனாலஜி வடிவில் செய்த ஒரு சிறிய விளையாட்டுத் தான் நேற்று என் வாழ்விலும் நடந்தேறியது.

இ-மெயில், Face book, Netlog உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அதிக நேரம் தொடர்பில் இருந்ததால் ஒரு கட்டத்தில் தொடர்பு சம்பந்தப்பட்ட எந்த சமூக வலைதளங்களையும் ஓபன் செய்யக் கூடாது என்று முடிவெடுத்திருந்தேன். அதற்காக facebook-ஐ மூடிவிட்டு, என் ஜி-மெயிலையும் மூடுவதற்காக அந்த விண்டோவை திறந்தேன். திறந்த நேரத்தில் ஒரு மெயில். ஆர்க்குட்டில் உங்கள் நண்பர் காத்திருக்கின்றார் என்று. இது வரை நான் ஆர்க்குட்டைத் திறந்ததே கிடையாது. அக்கவுன்ட் ஆரம்பித்ததோடு சரி. பிறகு திறக்கவே இல்லை. காரணம் அதை எப்படி பயன்படுத்தவேண்டும் என்பது எனக்கு புரியாமலேயே இருந்தது. சரி, திறந்து தான் பார்ப்போமே என்று என் அக்கவுண்டை திறந்தேன். அதில் என் நண்பன் ஒருவன் எனக்கு இன்வைட் செய்திருந்தான். அவனை என் நண்பர்கள் லிஸ்டில் சேர்த்துவிட்டு, மூடுவதற்குள் find friends பகுதியில் ஏகப்பட்ட நண்பர்கள் வந்தார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் யாரென்றே எனக்குத் தெரியாது. அவர்களோடு ஒருவராக அவளும் இருந்தாள்.

ஆம்! அவள் பெயர் மதி. எழிலரசியான அவளை பார்க்கு யாருக்கும் மனதில் சஞ்சலங்களே இருந்தாலும் மறைந்துவிடும். அது மரியாதையாக மாறி கையெடுத்து கும்பிட வைத்துவிடும். எப்பேர்ப்பட்ட கெட்டவனும் அவள் முன் நிற்கும் போது தன் தவறை உணர்ந்து அவளை கடவுளாக பாவித்து மன்னிப்பு கேட்பதற்கு தூண்டும். அவள் அப்படிப் பட்ட ஒரு தெய்வீகமான தோற்றம் கொண்டவள். அப்போது நான் என் கோவை காதலி கண்ணம்மாவை காதலித்துக் கொண்டிருந்தேன். ஒரு சில சிக்கல்களால் அவளை பார்க்க முடியாமல் இருந்தது. மனதில் மாபெரும் துயரத்தில் ஆழ்ந்திருந்தேன். மனது முழுக்க என் காதலியே நிறைந்திருந்தாள். அவளை நான் விரும்பியதற்கும் என் காதலியின் தெய்வீகமான தோற்றமே காரணம். அது மட்டுமல்ல என் காதலியும் அதற்கேற்ற குணம் பொருந்தியவள். என் காதலியை ஒத்த தோற்றமும், அவளையே ஒத்த குணமும், அவளை காட்டிலும் இந்தப் பெண்ணிடம் அதிகமாகவே இருப்பதாக தோன்றியது. என் உள்ளத்தில் கண்ணம்மாள் மறையவில்லை என்றாலும், மதி உட்புகுந்து கொண்டாள். முதல் பார்வையிலேயே அவளை நான் அறிந்துகொண்டேன். ஆனால் அப்போது அவளுக்கு என்னைத் தெரியாது. நான் கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ் படித்தபோது அவள் சமையற்கலையில் பட்டம் பயின்றாள். படிப்பில் எல்லாம் கெட்டிக்காரி என்று சொல்லிவிட முடியாது. சராசரியை தாண்டி படிக்கிற டைப். தோற்ற்றம் கவர்ந்தது உண்மைதான். ஆனால் அவள் அழகானவள் என்பதாலோ, படிப்பில் சிறந்தவள் என்பதாலோ, அறிவில் சிறந்தவள் என்பதாலோ நான் அவளை காதலிக்க முற்படவில்லை. அவள் தெயவீகமானவள். இந்தப் புள்ளியில் தான் அவள் என் மனம் கவர்ந்தாள். என்னைத் தாண்டி என் மனது காதல் வயப்பட்டது.

அவள் தன் பெண் தோழியர்களுடன் கூட உரக்கப் பேசியது கிடையாது. ஒரு சில விசயங்களை மட்டும் அவ்வப்போது பேசுவாள். அது என்ன விஷயம் என்றெல்லாம் இப்போது வரை எனக்குத் தெரியாது. ஒரு நாள் கல்லூரியில் எல்லோருக்கும் மத்தியில் நான் ஒரு கவிதை வாசித்தேன். எல்லோருக்கும் அது பிடித்துப் போக, அன்றே அவளும் என் மீது பார்வையை திருப்பினாள். என் வாழ்க்கையில் நான் ஒன்று மட்டும் உணர்ந்து கொண்டது உண்டு. சிந்தனையில் தீவிரத் தன்மையும், அளவு கடந்த மனோ திடமும், போராட்ட குணமும், நேர்மையான நடத்தையும், எப்போதும் நியாயமாக நடந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணமும் கொண்டவர்களை, மதியைப் போன்ற பெண்களுக்கு எளிதில் பிடித்துப் போகும். அந்த குணங்கள் எல்லாம் எனக்கு உண்டு என்ற மமதையாலோ, பெருமைக்காகவோ நான் இதை சொல்லவில்லை. அந்த குணங்கள் எனக்கு உண்டு. இதை என் அனுபவத்தால் சொல்கின்றேன். சில நல்ல பெண்களுக்கு இப்பேர்ப்பட்டவர்களை எளிதில் பிடித்துப் போகும். அப்படித்தான் நான் அவளைக் கவர்ந்திருந்தேன். அவளின் ஒற்றைப் பார்வை என் மனதில் ஆழத்தில் இருந்த காதலை ஒரு நிமிடம் ஆட்டி அசைத்துப் பார்த்துவிட்டது. எத்தனையோ தருணங்களில் காதலியை மட்டுமே நினைத்துக் கொண்டு வாழ்ந்திருக்கின்றேன். உண்மையில் அதனாலேயே என் வகுப்பில் படிக்கின்ற ஆறு பெண் தோழிகளின் பெயரும் எனக்கு முதல் ஆறுமாதங்கள் வரை தெரியாது. அவர்களை நான் திரும்பிக் கூட பார்க்காமல் வாழ்ந்தேன். மூன்று ஆண்டுகள் முழுதுமாக முடியும் வரையிலும் நான் எவரையும் திரும்பிப் பார்க்கவே இல்லை. அவ்வப்போது அவர்கள் கேட்டு நான் பேசியது உண்மை. ஆனால், நானாக பெச்சுக் கொடுத்ததில்லை. ஆனால், மதி அப்படி இல்லை. உடல் முழுதும் புகுந்து ஒரு ரசாயன மாற்றத்தையே ஏற்ப்படுத்தி இருந்தாள்.

கடைசி மூன்று ஆண்டுகள் வரை இருவரும் பார்வையிலேயே காதலை பகிர்ந்துகொண்டோம். வழிய சந்தர்ப்பங்களை உருவாக்கிக் கொண்டு சந்திப்பதற்கு நாங்கள் எந்த முயற்ச்சிகளையும் மேற்கொள்ளவில்லை. அப்போது நான் கண்ணம்மாவை காதலிப்பது இறுதிவரை என் கல்லூரியில் உள்ள எவருக்குமே தெரியாது. வகுப்பில் அப்போது நான் அசாதாரணமான மாணவனாக இருந்தேன். அதனால் ஒரு சில பெண்கள் என்னிடம் பேச விரும்பினாலும், தூரவே இருந்தார்கள். நானும் கண்ணம்மாள் மனதில் இருந்ததால் அந்த சூழலை விரும்பி ஏற்றுக்கொண்டேன். ஆனால் மதியிடம் அப்படி நடக்க முடியவில்லை. மதிக்கும் நான் அசாதாரணமானவன் என்ற ஒன்று தான் என்னிடத்தில் மிகப்பிடித்த குணாதிசியமாக இருந்தது. நானும் அவளும் ஒரே நேரத்தில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வோம். என் மனதிற்கும் காதலுக்கும் மதியின் பார்வை மிகப் பெரும் சவாலாக இருந்தது. நாங்கள் காதலை எப்போதும் வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. ஆனால் எங்கள் இருவரிடமும் இருந்தது கண்டிப்பாக காதல் தான். அவளுக்கு உள்ளூர என்னிடத்தில் பேச, என்னை காதலிக்க அளவு கடந்த விருப்பம். எனக்கும் அப்படித்தான். அந்த அளவு கடந்த விருப்பம் தான் எங்களை எவ்வளவு பேச வேண்டும் போல் இருந்தாலும் பேசாமலேயே இருக்கச் செய்துவிட்டது. புரியாவிட்டாலும் இது தான் காதலின் கொடுமை. வலி. ஆனால், ஒரு கட்டத்தில் ஒரு சமயத்தில் சராசரியாக இருப்பது போல நடித்துக் கொண்டு, என்னை அவள் தொட்டுப் பேசி இருக்கின்றாள். அதுவும் ஒரு சில வார்த்தைகளே. அது ஒரு தெய்வீகமான தீண்டல். இறைவன் இறங்கி வந்து அருள் செய்தது போல் இருந்தது. எங்கள் இருவருக்கும் கண்களில் முழுக்க முழுக்க நீர் நிறைந்து வழிந்தது. 

நானோ, அவளோ ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள எந்தப் பிரயத்தினமும் செய்துகொண்டது கிடையாது. ஆனால் மிக எதேச்சையாக ஒருவரை ஒருவர் எதிர் எதிரே கடந்து செல்லும் போது இருவருக்குமே மனம் மிக கனமாக இருக்கும். கடக்கிற தருணத்தில் பல பிரளயங்கள் மனதில் வந்து போகும். ஏண்டா, இந்த வழியில் வந்தோம் என்றும் இருக்கும். அதே நேரத்தில், இருவருக்குள்ளும் இத்தனை காதலா என்றும் மனம் சொல்லும். இத்தனைக்கும் கடக்கின்ற போது ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளக் கூட மாட்டோம். நான் அவளுக்கு எதிரே கடந்து போவதும், அவள் எனக்கு எதிரே கடந்து வருவதும் தெரியும். இருவருமே கீழே குனிந்தபடி தான் செல்வோம். அந்த உணர்வு தான் கண்களில் நீர் நிறைக்க மனதிலே அந்தக் கணத்தில் புயல், மலை என்று எல்லாமுமாக இருக்கும். மெல்லிய காதலைத் தாண்டிய மிக பிரம்மாண்டமான இன்னல்களுக்கு மனது ஆட்படும் தருணங்கள் அவை. இது தான் பூவுக்குள் ஏற்ப்படும் பூகம்பம் என்று வர்ணிக்கப் படுகின்றதோ என்னவோ!

எப்படியோ மூன்று ஆண்டுகள். இப்படியே கழிந்தது. யாரும் யாரிடத்திலும் காதலை வெளிப்படுத்தவில்லை. கல்லூரி முடிந்த போது எனக்கு விடுதலையும், தண்டனையும் ஒரே சமயத்தில் கிடைத்தது. சொல்லிக்கொள்ள மனம் எவ்வளவு துடித்தாலும் அதை நாங்கள் செய்துகொள்ளவே இல்லை. சொல்லிக்கொள்ளாமலேயே பிரிந்து கொண்டோம். கண்டிப்பாக என் இந்தக் காதலும் மிகப் புனிதமானது. கல்லூரி முடிந்தது. பிரிந்தோம். பிறகும் இன்று வரை எந்தப் பிரயத்தினமும் எடுக்கவில்லை. இப்போது ஆர்க்குட்டில் வந்திருக்கிறாள். திருமணம் முடிந்தது. ஒரு மகள். இப்போது அவள் மதி ராகவாச்சாரி. கீதா என்ற ஒரு வயது மகள் உண்டு. இப்போதும் அதே தெய்வீகத் தன்மையோடு இருக்கின்றாள். அவளை கையெடுத்து கும்பிட வேண்டும் போல தான் தோன்றுகின்றது. அவளிடம் காதல் மட்டும் இல்லை. பாசமும் அளக்கொள்ளாமல்  இருக்கின்றது. அதனால் வந்த இன்வைட்டை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் இப்போதும் சொல்ல வேண்டும் போலத் தான் இருக்கின்றது -"சகோதரி. நித்திய சுகமாய், உளமார்ந்த மகிழ்ச்சியாய், புன்னகை மாறாமல் எப்போதும் இரு. நல்ல கணவன் உனக்கு வாய்ததிருப்பவர். நல்ல பிள்ளையை பெற்றிருக்கின்றாய். நீ வாழும் குடும்பம் நல்ல குடும்பமாகவே இருக்கும். நாடு சிறக்க வாழ். ஆசீர்வதிக்க வயதோ, உன்னளவு தெய்வீகமோ எனக்கு இல்லை. ஆனாலும் அளப்பரிய ஆசிகள் வழங்கவேண்டும் போல இருக்கின்றது. வாழ்வாங்கு வாழ். வாழ்வாங்கு வாழ். " - இதையும் நான் அவளிடம் சொல்லவில்லை. அவ்வளவு தான்.

-வசந்த் குமார் அருணாசலம்